கஜா புயல் நிவாரணம் வழங்கிய தூத்துக்குடி சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய கலெக்டர் புதிய சைக்கிள் வழங்கினார்

கஜா புயல் நிவாரணம் வழங்கிய தூத்துக்குடி சிறுவனின் விருப்பப்படி கலெக்டர் சந்தீப் நந்தூரி புதிய சைக்கிள் வழங்கினார்.;

Update: 2018-11-28 22:30 GMT
தூத்துக்குடி, 

கஜா புயல் நிவாரணம் வழங்கிய தூத்துக்குடி சிறுவனின் விருப்பப்படி கலெக்டர் சந்தீப் நந்தூரி புதிய சைக்கிள் வழங்கினார்.

நிவாரண நிதி 

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த பாலமுருகன்–சுபப்பிரியா தம்பதியரின் மகன் யோகேஷ்ராம். இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2–ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தனது சேமிப்பு மற்றும் பள்ளி நண்பர்களிடம் இருந்து சேகரித்த நிதியை ‘கஜா‘ புயல் நிவாரணத்துக்காக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினான்.

அப்போது கலெக்டர், யோகேஷ் ராமிடம் சேமித்த பணத்தில் என்ன வாங்க நினைத்தாய் என்று கேட்டார். தான் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்ததாகவும், ‘கஜா‘ புயலால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை பார்த்து எனது சேமிப்பு தொகையை வழங்குவதாக தெரிவித்தான். இதைத் தொடர்ந்து மாணவனின் உண்டியலில் இருந்த ரூ.806, முதல்–அமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.

புதிய சைக்கிள் 

மேலும் 2–ம் வகுப்பு மாணவனின் இந்த செயலை பார்த்து வியந்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாணவன் யோகேஷ்ராமுக்கு புதிய சைக்கிள் வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அந்த மாணவன் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு ரூ.4 ஆயிரத்து 800 மதிப்பிலான புதிய சைக்கிளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். இதனை மாணவன் யோகேஷ்ராம் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான். நிழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்