தூத்துக்குடியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 5–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி வருகிற 5–ந் தேதி நடக்கிறது.

Update: 2018-11-28 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி வருகிற 5–ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அரசு ஊழியர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுத்து புதிய உத்வேகத்தை உருவாக்கவும், குழு மனப்பான்மை, ஒற்றுமை உணர்வை உருவாக்கவும், மாவட்ட நிர்வாகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவும் மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 5–ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ்நாடு அரசு துறையை சேர்ந்த நிரந்தர ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் ஆவர். தற்காலிக, தினக்கூலி பணியாளர்கள், சீருடை பணியாளர்கள் 6 மாதத்துக்குள் அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

விளையாட்டு போட்டிகள் 

இதில் ஆண்கள், பெண்களுக்கான ஓட்டப்போட்டிகள், இறகுபந்து போட்டி, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 4–ந் தேதி மதியம் 2 மணிக்குள், தங்கள் அலுவலக தலைவரின் கையொப்பத்துடன் “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ்ரோடு, தூத்துக்குடி–1“ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

5–ந் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு தேவையான விளையாட்டு சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு விடுப்பு உண்டு. பயணப்படி மற்றும் தினப்படியை தாங்கள் பணிபுரியும் துறையில் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்