காளசமுத்திரத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 147 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 147 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2018-11-28 22:45 GMT

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு), பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் தியாகராஜன் வரவேற்றார். முகாமில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு 147 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியா விவசாய நாடு. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும்போது அளவுக்கதிகமான உரங்கள் போடக்கூடாது. நிலத்தடி நீரை சேமித்து பயிர்களுக்கு நுண்ணுயிர் பாசனம், சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும். இஸ்ரேல் நாட்டில் வருடத்தில் 50 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தாலும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றுள்ளனர்.

ஆனால் நமது நாட்டில் வருடத்தில் 1,100 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் தன்னிறைவு பெறவில்லை. சில இடங்களில் பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு 14 அல்லது 15 வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். குழந்தை திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறு.

நமது சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் போளூர் வேளாண்மை உதவி இயக்குனர் வடமலை, தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவக்குமார், சமூக நல அலுவலர் மாலதி, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, போளூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மனோகரன், காளசமுத்திரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சின்னப் பையன், ஊராட்சி செயலர் தினகரன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டார்.

முடிவில் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருள் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்