“திருமணத்துக்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொன்றேன்” காதலி கொலையில் கைதான என்ஜினீயர் வாக்குமூலம்

“திருமணத்துக்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொன்றேன்” என காதலி கொலையில் கைதான என்ஜினீயர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

Update: 2018-11-28 22:00 GMT
வள்ளியூர், 

“திருமணத்துக்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொன்றேன்” என காதலி கொலையில் கைதான என்ஜினீயர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

காதலி குத்திக் கொலை 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த மயிலாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் ரவீந்திரன் (வயது 29). என்ஜினீயரான இவர், வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேலிமலை ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகள் மெர்சி (24) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதனால் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். பின்னர் ரவீந்திரன் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வள்ளியூர் பஸ்நிலையத்துக்கு எதிரே ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மெர்சி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது காதலன் ரவீந்திரனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம் 

அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:–

நானும், மெர்சியும் ஜவுளிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நான் மெர்சியை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தேன். அவளும் என்னை காதலித்தாள். எனக்கு வேலை பிடிக்காததால் திடீரென வேலையை விட்டு நின்று விட்டேன். அதன் பிறகு வேலைக்கு எதுவும் நான் செல்லவில்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம்.

தற்போது கடந்த சில வாரங்களாக என்னுடன் பேசுவதை மெர்சி தவிர்த்து வந்தாள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மெர்சியை எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். எனது அப்பா, அம்மாவிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களுக்கும் மெர்சியை பிடித்துவிட்டது. பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற மெர்சியிடம், திருமணத்தை பற்றி பேசினேன். ஆனால் அதற்கு அவள், எனக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை. நட்பாக பழகுவோம் என்றாள். இதனால் என்னை விட்டுவிட்டு வேறு யாரையாவது காதலிக்கிறாளா என்று நினைத்தேன்.

திருமணத்துக்கு மறுத்ததால்... 

நேற்று முன்தினம் மெர்சிக்கு போன் செய்து வெளியே அழைத்தேன். அவளும் பெர்மி‌ஷன் போட்டு வெளியே வந்தாள். வள்ளியூர் பஸ்நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடை முன்பு நான் நின்றேன். அவளும் வந்து நின்றாள். அவளிடம் மீண்டும் திருமணத்தை பற்றி பேசினேன். ஆனால் அவள், எப்போதும் போல நட்பாக பழகுவோம் என்று கூறி திருமணத்துக்கு மறுத்தாள். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எனக்கு கிடைக்காத மெர்சி, வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் நான் அவளை கத்தியால் குத்தினேன். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றேன். ஆனால் அங்குள்ள பொதுமக்கள் என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்