தூத்துக்குடியில் பரபரப்பு: வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கிய 450 கிலோ கடல் அட்டை சிக்கியது கார் டிரைவர் கைது

தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கப்பட்ட 450 கிலோ கடல் அட்டைகள் சிக்கியது. இது தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-28 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கப்பட்ட 450 கிலோ கடல் அட்டைகள் சிக்கியது. இது தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கடல் அட்டை 

கடல் அட்டை அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் கடல் அட்டையை பிடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்கள் பிடிக்கப்படுகிறதா? மற்றும் அவை கடத்தப்படுகிறதா? என கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களை பிடித்து கடத்துவதை தடுக்கும் பணியில் மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது.

காரில் சிக்கியது 

இந்த நிலையில் தூத்துக்குடி முத்தரையர் காலனி கடற்கரையில் கடல் அட்டை கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஒரு காரில் கடல் அட்டையை ஒருவர் ஏற்றிக் கொண்டு இருந்தார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் காரில் வைத்து இருந்த சுமார் 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி காரையும், அதன் டிரைவர் பூபாலராயர்புரத்தை சேர்ந்த மகேந்திரனையும் (வயது 36) மடக்கி பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கைது 

இதேபோன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டில் காய வைத்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் மகேந்திரனை கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், போலீசில் சிக்கிய 450 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தி வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கியது தெரியவந்தது. முத்தம்மாள் காலனியில் கடல் அட்டையை பதுக்கி வைத்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் சிக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்