புதிய வசதிகளுடன் ஹூண்டாய் எக்ஸென்ட், கிராண்ட் ஐ-10
ஹூண்டாய் நிறுவனம் எக்ஸென்ட், கிராண்ட் ஐ-10 மாடல் கார்களில் பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளது.
கார் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், தனது தயாரிப்புகளில் பிரபலமாகத் திகழும் எக்ஸென்ட் மற்றும் கிராண்ட் ஐ-10 மாடல் கார்களில் மேலும் பல சிறப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளது. இந்தப் பிரிவில் நிலவும் போட்டிகளைச் சமாளிக்க இத்தகைய கூடுதல் வசதிகளை இந்நிறுவனம் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.
* கிராண்ட் ஐ-10
கிராண்ட் ஐ-10 மேக்னா மாடலில், புதிதாக ரூப் ரெயில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 7 அங்குல தொடு திரை பொழுதுபோக்கு சிறப்பம்சத்தோடு ஹூண்டாய் ஐ-புளூ ஆப் (செயலி) சேர்த்து வழங்கப்படுகிறது. அத்துடன் பகலில் எரியும் எல்.இ.டி. விளக்குகள், ரியர் ஸ்பாயிலர் ஆகியன கூடுதல் அம்சங்களாகும். ஏ.சி. வென்ட் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
* புதிய எக்ஸென்ட்
அதேபோல எக்ஸென்ட் மாடலிலும் 7 அங்குல தொடுதிரை, ஹூண்டாய் ஐ-புளூ செயலி வசதி, உயர்த்தப்பட்ட ஸ்பாயிலர் ஆகியன கூடுதல் சிறப்பு வசதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. கிராண்ட் ஐ-10 மேக்னா மாடல் ரூ.5.69 லட்சம் முதல் ரூ.6.67 லட்சம் வரை விற்கப்படுகிறது. அதேபோல எக்ஸென்ட் மாடல் விலை ரூ.6.98 லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரை நீள்கிறது.
இவ்விரு கார்களில் ஐ-10 மாடலுக்கு ரூ.65 ஆயிரம் வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் 1.2 லிட்டர் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ.90 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.