விரைவில் வருகிறது ‘யெஸ்டி’ மோட்டார் சைக்கிள்
கிளாசிக் லெஜன்ட் நிறுவனம் ‘யெஸ்டி’ மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
ஜாவா மோட்டார் சைக்கிளுக்கு மறு ஜென்மம் அளித்து, கடந்த வாரம் அறிமுகப்படுத்திய கிளாசிக் லெஜன்ட் நிறுவனம் தற்போது அதே கால கட்டத்தில் பிரபலமாக விளங்கிய ‘யெஸ்டி’ மாடல் மோட்டார் சைக்கிளையும் அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. கிளாசிக் லெஜன்ட் நிறுவனத்தில் பெருமளவிலான பங்குகள் மஹிந்திரா நிறுவனம் வசம் உள்ளது.
கடந்த வாரம் ஜாவா மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தபோது கிளாசிக் லெஜன்ட் நிறுவனத்தின் தலைவர் அனுபம் தரேஜா, ‘முந்தைய காலத்தில் பிரபலமாகத் திகழ்ந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டெடுத்து அவற்றை மீண்டும் இத்தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்வதுதான் எங்கள் இலக்கு. அந்த வகையில் ‘யெஸ்டி’ மோட்டார் சைக்கிளை விரைவிலேயே அறிமுகம் செய்ய உள்ளதாக’ அவர் தெரிவித்தார்.
1980-ம் ஆண்டுகளுக்கு முன்பு 250 சி.சி. திறன் கொண்ட ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார் சைக்கிள்கள்தான் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. கால ஓட்டத்தில் 100 சி.சி. மோட்டார் சைக்கிள் வந்த பிறகு மக்களுக்கு சீறிப் பாயும் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார் சைக்கிள் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது.
ஆனால் இளைஞர்களின் ரசனையும் மாறி வருகிறது. அந்தக் காலத்தில் பண்ணையார், மிராசுதாரர் மட்டுமே வைத்திருந்த ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டுள்ளன.
அதேபோல ஜாவா மோட்டார் சைக்கிளும் கால மாற்றத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. அடுத்து இந்த வரிசையில் விரைவில் சேர்கிறது ‘யெஸ்டி’.