சிதம்பரத்தில்: வடமாநில வாலிபரை அடித்துக்கொன்ற 6 பேர் கைது
சிதம்பரத்தில் வடமாநில வாலிபரை அடித்துக்கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் காசுக்கடை தெரு பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 35 வயதுடைய வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் இருந்த வீடுகளின் கதவை தட்டியுள்ளார். மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் கதவுகளையும் தட்டிப்பார்த்துள்ளார். அப்போது, பலராமன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையின் கதவை அவர் திறக்க முயன்றுள்ளார். பின்னர் அதன் அருகே நின்று கொண்டிருந்த காரின் கதவை திறந்து பார்த்தார்.
அந்த வாலிபரின் செயலை பார்த்து கொண்டிருந்த அந்த பகுதி பொதுமக்கள் சிலர், திருடுவதற்கு தான் அவர் வந்துள்ளார் என்று கருதி, அந்த வாலிபரை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து, ஆவேசமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். அதில் கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெரு சந்தானக்கிருஷ்ணன் மகன் வாகிசன்(வயது 43), கண்ணங்குடி மெயின்ரோடு செல்வகுமார்(40), காசுக்கடை தெரு குட்டிபுலி என்கிற ரமேஷ்(30), சாமிநாதன் மகன் மாரியப்பன் என்கிற சுரேஷ்(28), பலராமன்(43), வி.எஸ்.ஆர். நகர் நடராஜன் மகன் விஜய்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.