கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம்: மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2018-11-27 23:33 GMT

மதுரை,

மதுரை அண்ணாநகர் பி.டி.காலனியை சேர்ந்தவர் முருகன், ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 38). இவர் மதுரை மாநகராட்சி கொசு ஒழிப்பு பிரிவில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களது மகள் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகன் பெற்றோருடன் வசித்தார்.

முருகனின் சகோதரருடன் பஞ்சவர்ணம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு சகோதரரை முருகன் கத்தியால் குத்தியதாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கணவன், மனைவி இடையே இந்த பிரச்சினை தொடர்ந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இரவு வீட்டில் தூங்கி விட்டனர்.

நள்ளிரவில் கண்விழித்த முருகன் திடீரென்று அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த பஞ்சவர்ணத்தின் தலையில் போட்டு கொலை செய்தார்.

அதன்பின்பு முருகன் நேராக அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு தனது மனைவியை கொலை செய்ததாக கூறி போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் முருகனை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று, ரத்தவெள்ளத்தில் கிடந்த பஞ்சவர்ணத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்