கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்; மத்திய– மாநில அரசுகளுக்கு, மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நேற்று பிறப்பித்தது.
மதுரை,
மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில், ‘கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணமாகவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்புப்பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். ‘‘புயலால் பாதிக்கப்பட்ட நகர் பகுதிகளில் 92 சதவீதத்திற்கு மேலும், கிராமப்புற பகுதிகளில் 64 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள், ‘‘நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். ஆனால் புயலால் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பாததால், அங்குள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் வருமாறு:–
* கஜா புயல் பாதிப்புகளை சரி செய்து, இயல்புநிலை திரும்ப தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
* பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கிராமங்களில் மின் இணைப்புகளை ஒரு வாரத்தில் சரிசெய்ய வேண்டும். அது குறித்து தமிழக மின்வாரிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மின் இணைப்பு சரிசெய்யப்படும் வரை ஜெனரேட்டர்களை வைத்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கும், வாகனங்களுக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* புயலால் 64 ஆயிரத்து 978 குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும், 30 ஆயிரத்து 352 குடிசைகள் பகுதி அளவு சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளுக்கு தலா ஒரு மண்எண்ணெய் அடுப்பும், தேவையான அளவு மண்எண்ணெயும் வழங்க வேண்டும். இதற்காக ரேசன் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை கேட்டு சம்பந்தப்பட்டவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. வீடு சேதமடைந்ததாக கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் வைத்திருக்கும் அனைவருக்கும் இவற்றை வழங்க வேண்டும்.
* சத்துணவு ஊழியர்கள் மூலம் உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.1,500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரூ.2 ஆயிரம் ஆக அதிகரிக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இது போதாது. தென்னைக்கும், இதுபோல மற்ற பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையையும் உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களின் மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க சுகாதார மற்றும் கல்வித்துறை முதன்மை செயலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மின்சார வினியோகத்துக்காக அண்டை மாநில உதவிகளையும் பெற்று, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ஒரு வாரத்தில் மின்வசதி செய்ய வேண்டும்.
* மின்வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்படாத வகையில் கொசு வலைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.
* புயல் நிவாரண பொருட்களை எடுத்து செல்பவர்களை அரசு பஸ்களில் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
* கிராமப்பகுதிகளில் நிவாரண முகாம்களை அதிகரித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கச்செய்வதுடன், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ராணுவம், துணை ராணுவத்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவ குழுவை ஏற்படுத்தி, தேவையான மருந்து, மாத்திரைகளை வினியோகம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட உத்தரவுகளை தமிழக அரசுக்கு நீதிபதிகள் பிறப்பித்தனர். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும் நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:–
* தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசின் நிபுணர் குழு ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
* கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழு, 2 நாட்களில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதை பரிசீலித்து தமிழக அரசுக்கு வழங்க உள்ள இடைக்கால நிவாரணம் பற்றி ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்.
* சேதமடைந்த எந்திர படகுகள், வள்ளம், நாட்டுப்படகுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொகையை கூடுதலாக வழங்க பரிந்துரைக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை செயல்படுத்தியது குறித்து மத்திய, மாநில அரசுகள் வருகிற 5–ந்தேதி, மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.