பாக் ஜலசந்தி கடல் பகுதியில் படகு மூழ்கி தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கி தத்தளித்த 5 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.

Update: 2018-11-27 23:30 GMT
பனைக்குளம்,

மண்டபம் கோவில்வாடி கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் தங்கச்சிமடத்தை சேர்ந்த வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் தாமரைக்குளத்தை சேர்ந்த கார்மேகம் (வயது43), முனியசாமி (50), உச்சிப்புளியை சேர்ந்த ராஜபாண்டி (48), காஞ்சிரங்குடியை சேர்ந்த முனித்துரை (52), தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி (34) ஆகிய 5 மீனவர்களும் மண்டபத்திற்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென படகின் அடிப்பகுதியில் பைபர் சேதமாகி கடல் நீர் உள்ளே வர தொடங்கியது. கடல் நீர் உள்ளே வருவதை தடுக்க மீனவர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் படகு கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது படகில் இருந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்டனர். பெரிய ரோந்து கப்பலில் வந்த இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டு கப்பலில் ஏற்றினர். மீட்கப்பட்ட 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் மற்றொரு படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகில் ஏற்றி கரைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கிய படகை மீனவர்கள் மீன்துறை அதிகாரிகள் அனுமதியுடன் இன்று (புதன்கிழமை) மீட்க செல்லவுள்ளனர்.

மேலும் செய்திகள்