சட்டத்தின் மூலமே அடிப்படை உரிமைகளை பெற முடியும் - நீதிபதி கயல்விழி பேச்சு
சட்டத்தின் மூலமே நமது அடிப்படை உரிமைகளை பெற முடியும் என்று தேசிய சட்ட தினவிழாவில் நீதிபதி கயல்விழி கூறினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்ட தினவிழா ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை தாங்கினார். முதன்மை குற்றவியல் நீதிபதி சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் தேசிய சட்ட தினத்தையொட்டி மாவட்ட நீதிபதி தலைமையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதன் பின்னர் மாவட்ட நீதிபதி கயல்விழி பேசியதாவது:–
தேசிய சட்டதினமானது கடந்த 1949–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த தேசிய சட்ட தினத்தின் குறிக்கோளானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு அடிப்படையாக உள்ள சட்டத்தின் ஆட்சியையும், சட்ட கொள்கைகளையும் காப்பது ஆகும்.
நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பது மற்றும் சட்ட தொழிலின் சுதந்திரத்தை காப்பது இதன் முக்கிய குறிக்கோளாகும். சட்டம் நம் வாழ்வில் இரு கண்கள் போன்றது. அதனை நாம் மதித்து வாழ வேண்டும். சட்டத்தின் மூலமே நமது அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் ப்ரீத்தா, இசக்கியப்பன், ராதாகிருஷ்ணன், ராஜேஸ்குமார், வக்கீல் சங்க செயலாளர் நம்புநாயகம், வக்கீல்கள் முருகபூபதி, கிருஷ்ணமூர்த்தி, சந்திரலேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.