புயலை விட வேகமாக சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது அமைச்சர் தங்கமணி பேட்டி

புயலை விட வேகமாக சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் தங்கமணி கூறினார்.;

Update: 2018-11-27 23:05 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக கீழ்வேளூரை அடுத்த அத்திப்பூலியூர் ஊராட்சி மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குருக்கத்தி நிவாரண முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அகரகடம்பனூர், மோகனூர், இருக்கை, தேவூர் மற்றும் நுகத்தூர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

அதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டதால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கிராமபுறங்களில் 30 சதவீதம் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வயல்வெளிகளில் அதிக மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. புயலை விட வேகமாக சீரமைக்கும் பணிகளில் மின்துறை, உள்ளாட்சி துறை மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

புயல் பாதித்த பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய குழுவினர், சிறப்பாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசை பாராட்டி உள்ளனர். நிவாரண பணிகளில் அனைத்துதரப்பினரும் ஒத்துழைத்தால் இன்னும் விரைவாக பணிகள் முடிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஜெயபால், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவா, நகர செயலாளர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்