அரக்கோணம்– தக்கோலம் இடையே ரெயில் பாதையில் கோட்ட மேலாளர் டிராலியில் சென்று ஆய்வு
அரக்கோணம் –தக்கோலம் இடையே ரெயில் பாதையில் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன்குலாதி டிராலியில் சென்று ஆய்வு செய்தார்.;
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன்குலாதி நேற்று ஆய்வு பணிக்காக சிறப்பு ரெயிலில் வந்தார். அவரை அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன், ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் ரகு ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களை ஆய்வு செய்தார். பயணிகளுக்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். ரெயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வரை 9.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வரும் புதிய தண்டவாள பணிகள், மின்மயமாக்கும் பணிகளை டிராலியில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ரெயில் வழித்தடத்தில் டிராலியில் இருந்து கீழே இறங்கி ஆய்வு செய்தார். சில குறைபாடுகள் குறித்து பொறியாளர்களுக்கு சரி செய்ய பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். மேலும் மின்மயமாக்கும் பணிகள், ரெயில்வே கேட் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பின்னர் மேல்பாக்கம் பகுதியிலும், லெவல் கிராசிங் கேட் பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ரெயில்வே தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–
அரக்கோணம் ரெயில் நிலையம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. அரக்கோணத்தில் இருந்து தக்கோலம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழியாக அரக்கோணம் வந்து சுற்றி செல்லும் சுற்று வட்ட பாதையில் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வரை புதிய ரெயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் மின்மயமாக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்டவுடன் இன்னும் 2 மாதத்தில் சுற்றுவட்ட பாதை, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆய்வின் போது தென்னக ரெயில்வே துறை பொறியாளர்கள், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்–இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார்ரஜாக், வீரர்கள், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.