சென்னிமலை அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து; ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
சென்னிமலை அருகே நூல் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காந்திநகரை சேர்ந்தவர் குமரன் (வயது 36). இவர் ஈங்கூர் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான நூல் மில்லை கடந்த 8 மாதமாக வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த மில்லில் 3 சிப்ட்டுகளாக 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கழிவு பஞ்சு மற்றும் பனியன் துணியில் இருந்து எந்திரங்கள் மூலமாக இந்த மில்லில் நூல் தயாரிக்கப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். காலை 10.30 மணி அளவில் திடீரென நூல் பிரிக்கும் எந்திரத்தில் இருந்து தீப்பொறி பறந்தது.
சில நொடிகளில் தீப்பொறி கழிவு பஞ்சுகளில் பட்டு தீப்பிடித்தது. அதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மளமளவென தீ பரவியது. உடனே தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அதனால் வெளியே ஓடிவந்து உயிர் தப்பிய அவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றார்கள். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் நூல் பிரிக்கும் எந்திரங்கள், 15 டன் பஞ்சு, பனியன் துணிகள் மற்றும் உதிரி பாகங்கள் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.