மத்திய அரசு பள்ளிக்கூடங்களுக்கு 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் ; பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
மத்திய அரசு பள்ளிக்கூடங்களுக்கு 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
பள்ளி பருவத்தில் தேர்வு என்றாலே மாணவ–மாணவிகளுக்கு ஒருவிதமான அச்சம் இருக்கும். எனவே அதை போக்கும் விதமாக “தேர்வு வீரர்கள்“ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திரமோடி ஒரு புத்தகத்தை எழுதினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த இந்த புத்தகம் தற்போது “பரீட்சைக்கு பயமேன்“ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகத்தை மாணவ–மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.
விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று புத்தகத்தை மாணவ–மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “தேர்வுகளை பயமின்றி அணுகுவது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி எழுதிய புத்தகத்தில் நல்ல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் மாணவர்களுக்கு மட்டும் அல்லாது ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டால் எவரையும் வெல்ல முடியும். 2 கொள்கைகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது மிகப்பெரிய வெற்றி பெறுவது. மற்றொன்று சமாதானமாகி தோற்றுப்போவது. இதில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை கடைப்பிடியுங்கள். மாணவர்களிடம் பொறாமை குணம் இருக்க கூடாது. கேந்திரிய வித்யாலயா (மத்திய அரசு) பள்ளிக்கூடங்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல சி.பி.எஸ்.இ. தேர்வு மையங்களும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் தர்மலிங்க உடையார், தேவ், அஜித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல பிரதமர் நரேந்திரமோடி எழுதிய புத்தகத்தை நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ–மாணவிகளுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வை நினைத்து அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள். அச்சப்படுவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திரமோடி “தேர்வு வீரர்கள்“ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை படிக்கும் மாணவ–மாணவிகள் அமைதியான மனநிலையில் தேர்வு எழுத முடியும். இந்த புத்தகம் 40 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அதில் 10 ஆயிரம் பிரதிகள் குமரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் அந்த அறிக்கையை நான் படிக்கவில்லை. அதில் என்னென்ன வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவில்லை. எனவே நான் அதுபற்றி கருத்து கூறமுடியாது. ஆனால் என்னை பொறுத்த வரையில் தமிழகத்தை பாதிக்கக்கூடிய வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்ட கூடாது. குறிப்பாக கர்நாடகா அணை கட்ட கூடாது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பை பிரதமர் நரேந்திரமோடி நேரில் வந்து பார்க்கவில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறியுள்ளார். ஆனால் மத்திய மந்திரியான நான் 3 முறை அங்கு சென்று பார்வையிட்டு மக்களிடம் நலம் விசாரித்தேன். மேலும் மத்திய குழுவும் ஆய்வு நடத்தி வருகிறது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுபெற இருக்கும் நிலையில் அவரை பிரச்சினையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் எந்த காரணத்துக்காகவும் பாதிக்கப்பட கூடாது என்பது என்னுடைய கருத்து. இதற்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க.–பா.ஜனதா கூட்டணி அமையுமா? என்பது பற்றி தேர்தல் சமயத்தில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.