ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த வேனில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த வேனில், ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-11-27 21:45 GMT

மும்பை,

மும்பை காந்திவிலி பகுதியில் சம்பவத்தன்று மதியம் 1.30 மணி அளவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்ப வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு பணப்பெட்டியை தூக்கிச்சென்று பணத்தை நிரப்பினார்கள்.

பின்னர் அந்த பணப்பெட்டியை வேனில் ஏற்றினர். அப்போது அங்கு 2 பேர் கையில் துப்பாக்கியுடன் வந்தனர். அவர்கள் ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

இதனை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் இருவரும் துணிச்சலுடன் செயல்பட்டு அவர்கள் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் பயந்துபோன இருவரும் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். இதனால் வேனில் இருந்த லட்சக்கணக்கான பணம் கொள்ளை போகாமல் தப்பியது.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்