வாகனங்கள் ஓட்ட பழகுனர் உரிமம் பெற கட்டுப்பாடுகள்; கவர்னர் கிரண்பெடி அதிரடி

வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமம் பெற கட்டுப்பாடுகளை விதித்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-27 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி அரசு அலுவலகங்களில் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி சாலை பாதுகாப்புக்காக பழகுனர் உரிமம் பெற கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். குறிப்பாக இதற்காக விண்ணப்பிக்கும்போது, மருத்துவ சான்றிதழ், தகுதி சான்றிதழ், வண்ணங்களை கண்டறியும் திறன், காதுகேட்கும் திறன் குறித்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.

2 சக்கர வாகனங்களுக்கான உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சோதனையின்போது ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளை கொண்டுவர கொண்டு உத்தரவிட்டார். அந்த ஹெல்மெட்டுகளுக்கு அவர்கள்தான் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தையும் கொண்டுவர செய்யுமாறு வலியுறுத்தினார்.

லைசென்சு வழங்கும்போது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, விதிகளை பின்பற்றுவது, விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை குறித்து விழிப்புணர்வு குறும்படம் காட்டவும் அறிவுறுத்தினார்.

விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு வர ஆன்லைன் மூலம் நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் நேரடியாக வருபவர்களுக்கு டோக்கன் முறையை பின்பற்றவும் கேட்டுக்கொண்டார். போக்குவரத்து துறையினால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கில் இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வார இறுதிநாட்களில் ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்