ஜெயங்கொண்டம் அருகே சோகம்: வெளிநாட்டில் இருந்து வந்த அண்ணனை அழைக்க சென்ற தம்பி விபத்தில் பலி

ஜெயங்கொண்டம் அருகே வெளிநாட்டில் இருந்து வந்த அண்ணனை அழைக்க சென்ற தம்பி விபத்தில் பலியானார்.;

Update: 2018-11-27 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை(வயது 65). கொத்தனாரான இவருக்கு அஜித்(21), சூர்யா(21) என 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவருடைய மூத்த மகன் அஜித் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அஜித்தும், சூர்யாவும் இரட்டையர் ஆவார்கள். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த அஜித் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் ஊருக்கு செல்ல வேண்டி தனது தம்பி சூர்யாவிற்கு போன் செய்து வரச்சொன்னார். அதன்படி மருதூரில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள தனது அண்ணன் அஜித்தை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சூர்யா சென்று கொண்டு இருந்தார். அப்போது ஜெயங்கொண்டம்- செந்துறை நெடுஞ்சாலையில் திடீர்குப்பம் அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சூர்யா படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்த தனது அண்ணனை ஆவலாக பார்க்க சென்ற தம்பி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்