தர்மபுரியில்: ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - ஆணவ படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்ற கோரிக்கை

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-27 22:15 GMT
தர்மபுரி, 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தோழி மற்றும் தொனி கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் பெண்கள், பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயா, மாவட்ட பொருளாளர் ராஜாமணி, மாவட்ட துணைத்தலைவர் பூபதி, தோழி கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் சங்கர், தொனிகூட்டமைப்பு மாவட்டஅமைப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ராதிகா கலந்து கொண்டு பேசியதாவது:- தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் அதிக அளவில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். சேலம் அருகே 8-ம் வகுப்பு மாணவி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஆகியவை பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உதாரணம்.

பெண்கள், பெண்குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க தனி சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரூர் அருகே பாலியல் பலாத்காரத்தால் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கை வருகிற 30-ந்தேதி சென்னையில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பழங்குடியின மாணவி பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த சம்பவத்தில் கடமையை செய்யத்தவறிய போலீசார், டாக்டர்கள், காப்பக நிர்வாகிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூரில் காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவ படுகொலை செய்தவர்கள் மீது அதற்குரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் பெண்கள் திரளாக கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்