வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளுக்கு தேசிய விருது
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளுக்கு தேசிய விருது கிடைத்து உள்ளது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வடவள்ளி,
தேசிய பயிர் மற்றும் மண்வள மேம்பாட்டு கருத்தரங்கம் கான்பூரில் நடைபெற்றது. இதில் அகில இந்திய அளவில் 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
தேசிய விருதுகளுக்கான போட்டியில், தாவரத்தின் நோய் எதிர்ப்பு தன்மையை தூண்டி தக்காளியை தாக்கும் மொட்டு கருகல் நச்சுயிரி நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி கட்டுரையை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் நோயியல் துறையை சேர்ந்த பட்டப்படிப்பு மாணவி மு.வந்தனா சமர்ப்பித்தார். இந்த கட்டுரைக்கு பி.ஆர்.வர்மா விருது மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பரிசு கிடைத்தது.
முதுகலை மாணவி ஜே.சுஷ்மிதா சமர்ப்பித்த ஆராய்ச்சி விளக்கப்படத்தில், தாஜ்மகால் கொய்மலரில் தோன்றும் திசுகுழாய் அடைப்பில் உள்ளிருக்கும் பாக்டீரியா நுண்ணுயிரிகளை ஜென்டா மைசின் கொண்டு அழித்து அதன் ஆயுளை நீட்டிப்பது குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விளக்கப் படத் திற்கு முதல் பரிசு வழங்கப் பட்டது.
வாழையின் பாக்டீரியா அழுகல் நோய் மற்றும் அதன் மேலாண்மைக்கான ஆராய்ச்சி கட்டுரையை பேராசிரியர் க.ராஜமாணிக் கம் சமர்ப்பித்து இருந்தார். அவருக்கு பி.பி.சின்கல் விருதும், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. பயிர்நோயியல்துறை பேராசிரியர் சே.நக்கீரன், பயிர்நோயியல் துறை குறித்த சிறந்த தொகுப்பாளருக்கான விருதை பெற்றார்.
தேசிய விருது பெற்ற மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், பயிர் பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பயிர் நோயியல் துறை பேராசிரியர் ரகுசந்தர் ஆகியோர் பாராட்டினார் கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.