சேலம் அருகே, அரசு பள்ளியில்: 3-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி - கால்கள் முறிந்து படுகாயம்
சேலம் அருகே அரசு பள்ளியில் 3-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் கால்கள் முறிந்த படுகாயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் அருகே ஆட்டையாம்பட்டி ரத்தினவேல்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17). சேலம் அருகே வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி நேற்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அங்கு தனது தோழிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் தோழிகள் அனைவரும் இறைவணக்கம் செலுத்த பள்ளி மைதானத்திற்கு வந்தனர். அப்போது மற்ற தோழிகள் ரவீணாஸ்ரீயை அழைத்தனர். அதற்கு அவர் முதலில் நீங்கள் செல்லுங்கள், பிறகு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு வகுப்பறையிலேயே இருந்து உள்ளார்.
பின்னர் திடீரென்று அவர் தான் மறைத்து வைத்து இருந்த பிளேடால் தனது இடது கையை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அந்த வலியையும் பொருட்படுத்தாமல் வகுப்பறையில் இருந்து மாடிக்கு ஓடிச்சென்றார். பின்னர் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்தார்.
இதில் அவரது 2 கால்களும் முறிந்து போனது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்றனர். அங்கு பள்ளி ஆசிரியர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது தோழிகள் சிலரிடம் விசாரித்தனர். பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரவீணாஸ்ரீயின் பெற்றோரிடம் விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ரவீணாஸ்ரீ மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ள குதித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தோழிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
‘கடந்த சில நாட்களாக ரவீணாஸ்ரீ தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது நாங்கள் அவளுக்கு தைரியம் சொன்னோம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்ததில் இருந்தே அவள் சோகமாக இருந்தாள். அப்போது நாங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறாய்? இறைவணக்கத்திற்கு செல்வோம் எழுந்து வா என்று கூறினோம். அப்போது அவள் எங்களுடன் வர மறுத்து விட்டாள்.
அப்போதும் ரவீணாஸ்ரீ எங்களிடம் எனக்கு உயிர் வாழ பிடிக்க வில்லை என்று கூறினாள். நாங்கள் அவளுக்கு மீண்டும் தைரியம் சொல்லிவிட்டு இறைவணக்கம் செலுத்த வந்து விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் இந்த துயர சம்பவம் நடந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.