பாளையங்கோட்டையில் இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் 9–ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது
இந்திய விமான படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகிற டிசம்பர் மாதம் 9–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது.
நெல்லை,
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இந்திய விமான படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகிற டிசம்பர் மாதம் 9–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
ஆட்சேர்ப்பு முகாம்இந்திய விமானப்படையில் பணிபுரிய துடிப்பும், துணிவும், ஆர்வமும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் குரூப் ‘ஒய்’ (தொழில்நுட்பம் அல்லாதது) பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற டிசம்பர் மாதம் 9–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14–ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு 12–ந்தேதி மற்றும் 13–ந்தேதி ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளது. 12–ந்தேதி காலை 6 மணி முதல் உடல் திறன் தேர்வும், அதன் பின்னர் எழுத்து தேர்வும் நடைபெறும். எழுத்து தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தகுதி தேர்வு –1, தகுதி தேர்வு –2 நடைபெறும்.
இந்த தேர்வுக்கு கல்வி தகுதியாக பிளஸ்–2 தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 14.7.1998 முதல் 26.6.2002 தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க முடியும்.
கொண்டு வரவேண்டியவைதேர்வு எழுத வரும் போது கருப்பு அல்லது ஊதா பால் பாயின்ட் பேனா, எச்.பி. பென்சில், ரப்பர், பசை, ‘பின்’ அடிக்கும் ஸ்டேபுலர் ஆகியவை கொண்டு வரவேண்டும். மேலும் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் அசல் மற்றும் 4 சுய ஒப்பமிட்ட நகல்கள், பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் 4 சுய ஒப்பமிட்ட மதிப்பெண் சான்று நகல்கள், இருப்பிட சான்றிதழ் அசல் மற்றும் 4 சுயஒப்பமிட்ட இருப்பிட சான்றிதழ்கள், மார்புக்கு முன்னால் கரும்பலகையில் (சிலேட்) பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கும் தேதி சரியாக குறிப்பிட்டு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுள்ள 7 கலர் புகைப்படங்கள் கொண்டு வரவேண்டும். இந்த புகைப்படங்கள் இந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் விவரங்கள்மேலும் விவரங்களுக்கு www.airmenselection.gov.in அல்லது www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.