தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஐகோர்ட்டு உத்தரவின் ஒரு பகுதியை மட்டுமே சி.பி.ஐ. பின்பற்றுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் ஒரு பகுதியை மட்டுமே சி.பி.ஐ. பின்பற்றுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் ஒரு பகுதியை மட்டுமே சி.பி.ஐ. பின்பற்றுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘கஜா‘ புயல்
‘கஜா‘ புயல் பாதிப்பை பார்வையிட முதல்–அமைச்சர் தற்போது தான் ரெயிலில் புறப்படுகிறார். தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு நல்ல கட்டமைப்பு உருவாக்கி பணம் கொடுப்பார்கள். அதே போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் உதவவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வு இல்லை. புயல் வருகிறது என்ற எச்சரிக்கையை சரியாக கொடுத்து உயிர் சேதத்தை குறைத்த தமிழக அரசு, புயல் வந்த பிறகு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.
நெடுவாசலில் ஒரு விவசாயி தற்கொலை செய்து உள்ளார். தமிழக அரசு அறிவித்து உள்ள இழப்பீடு கேலி கூத்தாக உள்ளது. ஒரு தென்னைக்கு ரூ.1100–ம், வாழை மரத்துக்கு ரூ.100 என்று இழப்பீடு நிர்ணயித்து உள்ளனர். ஆகையால் தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரமும், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் கொடுக்க வேண்டும்.
நடவடிக்கை
நிர்மலாதேவி வழக்கில் 3 பேருடன் வழக்கை முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிகிறது. இதில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை வளையத்துக்குள் உயர்மட்ட அதிகாரிகளை கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
சி.பி.ஐ. விசாரணை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை போலீஸ், மாவட்ட நிர்வாகம் மீது புகார்கள் இருந்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவில் இருந்தது. அந்த உத்தரவு நகலையும், எங்கள் மனுவையும் சி.பி.ஐ. இணை இயக்குனரிடம் நேரடியாக கொடுத்து உள்ளோம். ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்கை மட்டும் விசாரித்து வருகின்றனர். ஐகோர்ட்டு உத்தரவின் ஒரு பகுதியை மட்டும் சி.பி.ஐ. பின்பற்றுகிறது. சி.பி.ஐ. விசாரணை எப்படி இருக்கும் என்பது பற்றிய கவலை எங்களுக்கு இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் மனு கொடுப்பதாக தெரிகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பு கார்ப்பரேட் நலனுக்கு ஆதரவாக இருந்து விடக்கூடாது என்று தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கிறோம்.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாதி ஆணவ கொலைகள் நடந்து வருகிறது. இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ராகவன், அப்பாத்துரை, வாலிபர் சங்க செயலாளர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.