இனி வரும் தேர்தல்களில் அனைத்து தொகுதியிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
புதுவையில் இனி நடக்கும் தேர்தல்களில் அனைத்து தொகுதியிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறினார்.
புதுச்சேரி,
வாக்குப்பதிவு எந்திரத்தின் உண்மை தன்மையை விளக்கும் விதமாக நிகழ்ச்சிகளை தேர்தல் துறை நடத்தி வருகிறது. அந்த வகையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம் (வி.வி.பாட்) குறித்த செயல்விளக்கம் அரசியல் கட்சிகளுக்கு நேற்று ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கலந்துகொண்டு வி.வி.பாட் எந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியாவில் சுதந்திரமாக நேர்மையான முறையில் தேர்தல் நடந்து வருகிறது. சமீப காலங்களாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக ஆதரமற்ற புகார்கள் வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழப்பு ஏற்படுகிறது.
இதுதொடர்பான நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த இதுபோன்ற விளக்கத்தை கொடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இனி நடக்கும் தேர்தல்களில் அனைத்து தொகுதியிலும் வி.வி.பாட் எந்திரம்தான் உபயோகப்படுத்தப்படும். இதன் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியமுடியும்.
வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வாக்காளர்களுக்குத்தான் வாக்குகள் பதிவானதா? என்பது தொடர்பாக வி.வி.பாட் எந்திரத்தில் துண்டு சீட்டு மூலம் அந்த சின்னம் 7 வினாடிகள் தெரியும். அதன்பின் அந்த துண்டு சீட்டு வி.வி.பாட் எந்திரத்திற்குள்ளாகவே விழுந்துவிடும்.
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு பேசினார்.
தொடர்ந்து அரசியல் கட்சியினர் வி.வி.பாட் எந்திரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். அதற்கு தேர்தல் அதிகாரிகள் பதில் அளித்தனர். வி.வி.பாட் எந்திரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் துறை அதிகாரிகள் அடுத்த மாதம் முதல் தொகுதி வாரியாக வேன் மூலம் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பாக குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த படங்களும் காட்டப்படும் என்றும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இணை தலைமை தேர்தல் அதிகாரி குமார், துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேலு மற்றும் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் (காங்கிரஸ்), வேல்முருகன் (என்.ஆர்.காங்கிரஸ்), அன்துவான் சூசை (அ.தி.மு.க.), நடராஜன் (தி.மு.க.), கீதநாதன் (இந்திய கம்யூனிஸ்டு) மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.