பாரதீய ஜனதா சார்பில் முழுஅடைப்பு: புதுச்சேரியில் கடைகள் அடைப்பு

பாரதீய ஜனதா சார்பில் புதுவையில் நேற்று நடந்த முழுஅடைப்பின்போது கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் ஓடவில்லை.;

Update: 2018-11-27 00:06 GMT

புதுச்சேரி,

சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரி புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

ஆனால் அதற்கு முன்னரே பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் தனியார் பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் நேற்று புதுவையில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்தனர். அவ்வப்போது இயக்கப்பட்ட அரசு பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏறிச் சென்றனர். தனியார் பஸ்கள் ஓடாததால் கடலூர், சிதம்பரம், திண்டிவனம், விழுப்புரம் செல்லும் அரசு பஸ்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேரு வீதி, அண்ணாசாலை, மி‌ஷன் வீதி, காந்தி வீதி 100 அடி ரோடு உள்ளிட்ட முக்கியமான வர்த்தக நிறுவனங்கள் அடங்கிய பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. புதிய பஸ்நிலைய பகுதியிலும் ஒரு சில கடைகள் திறந்து இருந்தன.

குபேர் பஜாரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட்டிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மீன் மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது. முழுஅடைப்பு போராட்டங்களின்போது பெட்ரோல் பங்குகள் மூடப்படுவது வழக்கம். ஆனால் நேற்று பெரும்பாலான பங்குகள் திறந்திருந்தன.

தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் என்று கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டபோதும் சிறுபான்மையினர் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள் இயங்கின.

மாணவர்களை அழைத்து வரும் மாணவர் சிறப்பு பேருந்துகள் மற்றும் கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களுக்கு பெருமளவு தனியார் பஸ்களே ஓடும் நிலையில் நேற்று அவை இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் இரு சக்கர வாகனங்களில் வேலைக்கு வந்து சென்றனர்.

நகரப்பகுதியில் ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. போலீசார் பாதுகாப்பு கொடுக்க முன்வந்த போதிலும் கடைக்காரர்கள் கடைகளை திறக்கவோ, தனியார் பஸ் முதலாளிகள் பஸ்களை இயக்கவோ முன்வரவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழுஅடைப்பின்போது பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக போலீசார் அடிக்கடி ரோந்து சுற்றி வந்தனர். முக்கிய சந்திப்புகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர். மாலையில் கடைகள் திறக்கப்பட்டன. வழக்கம்போல் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்