தற்கொலைக்கு முயன்ற தாயாரின் கோரிக்கை ஏற்பு: சிறுமி பலாத்கார வழக்கை மகளிர் கோர்ட்டு விசாரிக்க தடை

தற்கொலைக்கு முயன்ற தாயாரின் கோரிக்கையை தொடர்ந்து, சிறுமி பலாத்கார வழக்கை மகளிர் கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

Update: 2018-11-26 22:57 GMT

மதுரை,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிறுமியான எனது மகளை 5 பேர் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் 5 பேரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட்டு, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. சமீபத்தில் குறுக்கு விசாரணையின்போது நீதிபதி, எனது மகளிடம் விரும்பத்தகாத வகையில் பேசியது மட்டுமல்லாமல், மிரட்டும் தொனியிலும் பேசினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பர்மாபாண்டி, செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. எனவே இந்த வழக்கை சம்பந்தப்பட்ட மகளிர் கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை வேறொரு மாவட்டத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து அந்த மகளிர் கோர்ட்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் தாயார் திடீரென தற்கொலைக்கு முயன்று, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சிறுமி பலாத்கார வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திட்டியதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நேற்று விசாரித்தார்.

முடிவில், சிறுமி பலாத்கார வழக்கை சம்பந்தப்பட்ட மகளிர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த பெண் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அளித்த வாக்குமூலத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்