மழைநீரை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா

குடியிருப்புகளில் சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மண்டபம் முகாமை அடுத்த எருமைதரவை கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-26 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

மண்டபம் முகாம் அருகே உள்ள எருமைதரவை ஏ.கே.தோப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் கிராம மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் 30 குடும்பங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் எங்கள் பகுதி முழுவதும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவதியடைந்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள ஊருணி தூர்வாரப்படாததால் சிறிய மழைக்கே நிரம்பி எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. மேலும் எங்கள் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனில்லை. எனவே உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்தி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கீழக்கரை அருகே உள்ள கற்காத்தி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் வந்து, தனது கணவர் செந்தில்குமார் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து தனியாக ஓலை குடிசையில் தங்க வைத்துள்ளதாகவும், சாப்பாட்டிற்கு கூட பணம் தருவதில்லை என்றும், கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வருவதால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தார். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்