கஜா புயல் நிவாரண பணிகளை துரிதப் படுத்த வேண்டும், கலெக்டரிடம் மனு

திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-11-26 22:06 GMT

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில் வந்தவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன. அந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பல கிராமங்களில் தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கணக்கு எடுக்கும் பணியை தொடங்கவில்லை. வீடுகளை இழந்தவர்களுக்கும் இதுவரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை. எனவே இந்த பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமையில் வந்த நிர்வாகிகள் திருச்சி ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் தொல்காப்பியம், மணிமேகலை, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் மற்றும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் டிசம்பர் 6 மற்றும் 7–ந்தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தடை விதிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்தரங்கு நடத்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது என கோரி மனு கொடுத்தனர்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சியினர் கொடுத்த மனுவில் திருச்சி மாநகராட்சி 28–வது வார்டு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் கடித்ததால் ஒரே நாளில் 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த வார்டில் நாய்களை உடனே பிடித்து செல்ல மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நவநீதன் காற்றினால் சேதம் ஏற்படாமல் இருக்க திருச்சி– கரூர் சாலையில் உள்ள மிகவும் பழமையான புளிய மரங்களையும், சாய்ந்த நிலையில் உள்ள மரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

மேலும் செய்திகள்