அந்தநல்லூர் ஒன்றியத்தில் கஜா புயலால் 493 எக்டேர் வாழை பாதிப்பு; ஆய்வு கூட்டத்தில் தகவல்

அந்தநல்லூர் ஒன்றியத்தில் கஜாபுயலால் 493 எக்டேர் வாழை பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-11-26 22:15 GMT

ஜீயபுரம்,

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கஜா புயல் பாதிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், புயலால் அந்தநல்லூர் ஒன்றியத்தில் 15.745 எக்டேர் அளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு பயிர் பாதிப்புக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 833 கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள 493 எக்டேர் பரப்பளவிலான வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இழப்பீடாக ரூ.67 லட்சத்து 12 ஆயிரத்து 919 மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மோகன், அந்தநல்லூர் பகுதி வருவாய் அதிகாரி திலகவதி, கிராம நிர்வாக அதிகாரி கிருபா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், என்ஜினீயர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டம் முடிந்த பிறகு, அவர்கள் கடியாகுறிச்சி பகுதியில் புயலால் முறிந்த வாழைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மீண்டும் அமைச்சர் வளர்மதி தலைமையில் புயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் முதல் பணியாளர்கள் வரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் வளர்மதி ஒவ்வொரு ஊராட்சி செயலாளர்களிடமும் குறைகள் கேட்டறிந்தார். அப்போது ஊராட்சி செயலாளர்களிடம் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அரசு ஊழியர்கள் கூறும் போது, அரசு ஊழியர்களின் ஆய்வு கூட்டத்தில் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டதால் எங்களால் (ஊராட்சி செயலாளர்கள்) எங்களுக்கு உரிய பிரச்சினைகளை எடுத்து கூறமுடியவில்லை என்று புலம்பினார்கள்.

மேலும் செய்திகள்