அலகுமலையில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் வேலி அமைக்கக்கூடாது; கலெக்டரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு
அலகுமலையில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் வேலி அமைக்க கூடாது என கலெக்டரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு கொடுத்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:– பொங்கலூர் ஒன்றியம் அலகுமலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை கம்பி வேலி அமைத்து தடுத்தது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் மற்றும் கலெக்டர், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆய்வு மேற்கொள்ள வரும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.
பேச்சுவார்த்தை என்றால் அரசு இருதரப்பினரையும் உரிய சமமான மரியாதையுடன் நடத்தி இருதரப்பு கருத்துகளை கேட்டு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமான கருத்துகளின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இந்த பகுதியில் கம்பி வேலியையொட்டி பெரிய கேட் அமைத்து பகலில் திறக்கவும், இரவில் மூடுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களின் பொது வழித்தட பயன்பாட்டை பாதுகாப்பு என்ற காரணத்தை காட்டி வேலி அமைப்பது அரசே தீண்டாமையை கடைப்பிடிக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் பொதுபயன்பாட்டில் உள்ள இடத்தில் வேலி அமைக்க கூடாது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக மனு கொடுக்க வந்தவர்கள் அனைவரும் கலெக்டரை சந்திக்க வேண்டும் எனக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் போலீசாரை கண்டித்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் 1–வது வார்டு கிளையை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் ‘‘ திருப்பூர் மாநகராட்சி 1–வது வார்டு பகுதியில் தண்ணீர்பந்தல் காலனி, திலகர்நகர், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம் ரோடு, தியாகி குமரன் புதுக்காலனி ஆகிய பகுதிகளில் நியாய விலைக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் உள்ள குடும்ப அட்டை எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
மேலும், கோதுமை, அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சரியாக வழங்காமல் மளிகை பொருட்களை வாங்க சொல்லி விற்பனையாளர்கள் நிர்பந்தம் செய்து வருகிறார்கள். எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றிருந்தனர்.
ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘திருப்பூர் மாவட்டம் 2–வது வார்டு ஆத்துப்பாளையம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களை அதிகாரிகள் வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’’ என்றனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதாவினர் கொடுத்த மனுவில் ‘‘ திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 32–வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் பல இடத்தில் உடைந்து 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே குடிநீர் குழாயை விரைவாக சரிசெய்ய வேண்டும். மேலும், பாளையக்காடு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பள்ளி மாணவிகளை இளைஞர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் ஒரு போலீசாரை ரோந்து பணிக்கு நியமனம் செய்ய வேண்டும். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 42–வது வார்டில் எஸ்.ஆர்.டி. அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் கட்டுமானம் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடையிலும், அங்கேரிபாளையத்திற்கு உட்பட்ட ரேஷன் கடையிலும், அனுப்பர்பாளையத்திற்கு உட்பட்ட ரேஷன் கடையிலும், காலேஜ் ரோடு ரேஷன் கடையிலும், கோவில்வழியில் உள்ள ரேஷன் கடையிலும் 2 கடைகளுக்கு ஒருவர் மட்டுமே பணியாற்றுகின்றனர். எனவே இதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணியினர் கொடுத்த மனுவில் ‘‘அருள்புரத்தில் இருந்து சேகம்பாளையம் செல்லும் சாலை குண்டும்–குழியுமாகவும், மிகவும் மோசமடைந்தும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றிருந்தனர்.