படைபுழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் விவசாயிகள் மனு

படைபுழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பளிங்காநத்தம் கிராம விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2018-11-26 21:45 GMT
அரியலூர், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் படை புழு தாக்கிய மக்காச்சோள பயிருடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், பளிங்காநத்தம் கிராமத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கதிர் வந்துள்ள நிலையில் படை புழுக்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், விவசாயிகள் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, படைபுழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கான உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பழைய அங்கனூர் கிராம மக்கள் திரட்டிய நிவாரண தொகையான ரூ.20 ஆயிரத்தை கலெக்டர் விஜயலட்சுமியிடம் வழங்கினர். அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் உள்ள சாத்தியப்பா கோவில் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சங்கம் ஏற்படுத்தி நிர்வாகத்திற்கு தொந்தரவு செய்ய முயற்சித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோவில் நிர்வாகத்தினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதே போல் அரியலூர் மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில், சங்கத்தினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும். டோக்கன் கொடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும், அனுபவம் உள்ளவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 335 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் விஜயலட்சுமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் விஜயலட்சுமி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் திருநங்கைகள் 10 பேருக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பூங்கோதை, மாவட்ட சமூக நல அதிகாரி பூங்குழலி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்