கஜா புயலில் ஹால் டிக்கெட்டை தொலைத்தவர்களுக்கு பாதிப்பு: தேர்வை புறக்கணிப்பதாக அறிவித்த கல்லூரி மாணவர்கள் மன்னார்குடியில் பரபரப்பு

கஜா புயலில் ஹால் டிக்கெட்டை தொலைத்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மன்னார்குடியில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணிப்பதாக திடீரென அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-11-26 22:45 GMT
சுந்தரக்கோட்டை, 

கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தங்கள் பாட புத்தகங்களையும், சான்றிதழ்களையும் இழந்து வேதனையில் உள்ளனர். புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர், உணவு இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரியில் நேற்று பருவ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு எழுதுவதற்காக ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரிக்கு நேற்று மாணவர்கள் வந்தனர். இதில் ஒரு பகுதி மாணவ-மாணவிகள் தேர்வுகளை புறக்கணிப்பதாக திடீரென அறிவித்து, கல்லூரி முன்பாக திரண்டு நின்றனர்.

இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் திடீரென தேர்வை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டு, கல்லூரி வாசலில் திரண்டு நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-

வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பருவ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியிலும் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்.

கஜா புயல், மழையால் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளை இழந்த நிலையில் எப்படி படிக்க முடியும்? என்ற நிலையில் மாணவர்கள் உள்ளனர். அதேபோல மின்சார வசதி இல்லாமலும், உணவு கிடைக்காமலும் மாணவர்கள் பலர் 10 நாட்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

இரவு நேரத்தில் படிப்பதற்கு மெழுகுவர்த்தி கூட இல்லை. தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டையும் பல மாணவர்கள் தொலைத்து விட்டனர். கஜா புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்