கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் 3-வது நாளாக ஆய்வு நாகையில், பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்டித்தர வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று 3-வது நாளாக ஆய்வு நடத்தினர். அப்போது நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்,
கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் உள்ள ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. தென்னை, மா, பலா மற்றும் பழமைவாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, நெற்பயிர்கள், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பலவகையான பயிர்களும் பாதிக்கப்பட்டன. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்ந்தன. துணை மின்நிலையங்களும் சேதம் அடைந்தன.
இதனைத்தொடர்ந்து புதுடெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது புயல் சேதத்துக்கு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக ரூ.1500 கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார். மேலும் மத்திய குழுவையும் பார்வையிட தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து சேத விவரங்களை பார்வையிட மத்திய குழுவை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.
அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர்(நீதித்துறை) டேனியல்ரிச்சர்டு தலைமையில் மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்கள், சென்னையில் முதல்-அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கடந்த 24-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். நேற்று முன்தினம் 2-வது நாளாக தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று 3-வது நாளாக நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் சடையன்காடு கிராமத்திற்கு சென்றனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்டு பள்ளிக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், தாங்கள் வீடு, வாசல், உடைமைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் மத்திய குழுவினர் அங்கு சேதம் அடைந்த வீடுகளையும், மரங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாத நிலையில் சேதமடைந்த உணவு தானிய கிடங்கை பார்வையிட்டனர். பின்னர் பெரியகுத்தகை கிராமத்திற்கு சென்று அங்கு பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் தங்கியிருந்த பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து புஷ்பவனம் கிராமத்தில் உள்ள கடற்கரைக்கு சென்று அங்கு புயலால் சேதம் அடைந்த படகுகளையும், கடல்நீர் ஊருக்குள் புகுந்து இடுப்பளவு வரையில் சேறும், சகதியுமாக படித்து இருந்ததையும் பார்வையிட்டனர். தொடர்ந்து நாலுவேதபதி மற்றும் விழுந்தமாவடி மீனவர் காலனி கிராமத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மீனவர்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
மத்திய குழுவினருடன் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், உதயகுமார், தங்கமணி, அன்பழகன், சரோஜா, வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்தியகோபால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.