வைத்தீஸ்வரன்கோவிலில் வேரோடு சாய்ந்த தலவிருட்சம் மீண்டும் துளிர்த்தது பக்தர்கள் மகிழ்ச்சி
வைத்தீஸ்வரன்கோவிலில் வேரோடு சாய்ந்த தலவிருட்சம் மீண்டும் துளிர்த்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மனுடன் கூடிய வைத்தியநாத சாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சாமி உள்ளிட்ட சாமிகள் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே உள்ள ஆதிவைத்தியநாதர் சன்னதியில் இருந்த 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் தலவிருட்சமான வேப்பமரம் கடந்த 1-ந் தேதி மழையால் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனை தொடர்ந்து சாய்ந்து விழுந்த கோவில் தலவிருட்ச மரத்திற்கு தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் பால் ஊற்றி தீபாராதனை காட்டினார்.
பின்னர் மீண்டும் தலவிருட்ச மரத்தை மீண்டும் துளிர்க்க வைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக தாவரவியல் துறை நிபுணர் குழுவினர் முறிந்து விழுந்த தலவிருட்சத்தை நேரில் வந்து பார்வையிட்டு விருட்சா ஆயுர்வேதா முறையில் முறிந்த தலவிருட்சத்தினை மீண்டும் துளிர்க்க வைக்கும் பணியை மேற்கொண்டனர். அதன்படி முறிந்த தலவிருட்சமான வேப்பமரம் தற்போது புதிதாக துளிர்த்துள்ளது. இதனை தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பார்வையிட்டு வழிபாடு செய்தார். தலவிருட்சம் மரம் மீண்டும் துளிர்க்க தொடங்கி உள்ளது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.