அரசாணையை எரித்து போராட்டம்: கூடலூரில் 120 ஆசிரியர்கள் கைது

கூடலூரில் அரசாணையை எரித்து போராட்டம் நடத்திய 120 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-26 21:30 GMT
கூடலூர், 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை 11.30 மணிக்கு அரசாணை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுனில்குமார், பொருளாளர் ஜெயசீலன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க வட்டார தலைவர் ரவிக்குமார், செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாணை எண் 234 மற்றும் 303 ஆகிய நகல்களை தரையில் போட்டு தீவைத்து எரித்து, பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக ஓடி சென்று அரசாணைகளை எரித்து கொண்டிருந்த ஆசிரியர்களிடம் இருந்த தாள்களை பிடுங்கினர். சில போலீசார் தீ வைத்த அரசாணைகள் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில ஆசிரியர்கள் கீழே விழுந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார், ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 120 ஆசிரியர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் கைதான ஆசிரியர்கள் கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தினகரன், செயலாளர் சுனில்குமார் ஆகியோர் கூறியதாவது:- மத்திய அரசுக்கான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு தடையாக தமிழக அரசின் 7-வது ஊதியக்குழு அரசாணை எண் 234 உள்ளது. மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500 குறைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 8-வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூ.35,400 என நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தமிழக அரசின் அரசாணை எண் 303-ல் அடிப்படை ஊதியம் ரூ.20,600 ஆக குறைத்துள்ளது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலேயே மிக குறைவான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறார்கள். ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 3 வகையான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசாணை எண்கள் 234, 303-ஐ எரிக்கும் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்