மாணவி பலாத்கார வழக்கில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை உயர்மட்ட கள ஆய்வு குழுவினர் பேட்டி
கோட்டப்பட்டி அருகே மாணவி பலாத்கார வழக்கில் உடனடியாக எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று உயர்மட்ட கள ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அண்மையில் நடந்த குழந்தைகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் தலைவர் சாந்தா சின்கா, குழந்தை பாதுகாப்பு நிபுணர்கள் வித்யாசாகர், அருணாரத்னம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா ஆகியோர் தலைமையிலான குழுவினர் உயர்மட்ட களஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் தடயவியல் நிபுணர் டாக்டர் சேவியர் செல்வசுரேஷ், வக்கீல்கள் அஜீதா, மார்டின், குழந்தை உரிமை ஆர்வலர்கள் அலோசியஸ், தேவநேயன், கல்வியாளர் அசிபா, இந்திய குழந்தைகள் நலசங்க நிர்வாகி டைடஸ் டேனியல் ஆகியோரும் பங்கேற்று களஆய்வு நடத்தினார்கள்.
இந்த குழுவினர் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சீனிவாசராஜூ, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், தர்மபுரியில் உள்ள குழந்தைகள் காப்பத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து உயர்மட்ட கள ஆய்வு குழுவினர் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விவரங்களை கேட்டறிந்து களஆய்வு நடத்தப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்கூட்டியே திட்டமிடல், குற்றங்களை முன்கூட்டியே தடுக்க உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளால் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய பிரச்சினைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டிய துறைசார்ந்த அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்போ, பிரச்சினைகளை கையாள வேண்டிய விதம் குறித்த தெளிவோ இல்லை என்பது இந்த குழுவின் களஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கோட்டப்பட்டி அருகே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான மாணவிக்கு முதலில் அரூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முறையாக அனுப்பப்படவில்லை. இதனால் சாதாரண உடல்நல பாதிப்பிற்கு அளிக்கப்படுவது போன்ற சிகிச்சையே தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களாக அந்த மாணவிக்கு அளிக்கப்பட்டிருப்பது களஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைத்திருந்தால் அந்த மாணவியை காப்பாற்றி இருக்கமுடியும். இந்த விவகாரத்தில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவி பலாத்கார வழக்கில் உடனடியாக எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இத்தகைய பிரச்சினைகளில் இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து சட்ட விதிகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க முன்வர வேண்டும்.
குற்றங்கள் நடந்தபின் நடவடிக்கை எடுப்பதைவிட குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இந்த களஆய்வு மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கை ஒரு வாரத்தில் தமிழக முதல்-அமைச்சர், முதன்மை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் நேரில் சமர்ப்பிக்கப்படும். இதேபோல் மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றிலும் சமர்ப்பிக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளின்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு பேட்டியின்போது உயர்மட்ட களஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.