கலெக்டர் பங்களாவில் போலீஸ்காரரிடம் தகராறு வக்கீல்கள் உள்பட 15 பேர் மீது வழக்கு

பாளையங்கோட்டையில் கலெக்டர் பங்களாவில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த 2 வக்கீல்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-11-26 22:15 GMT
நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் மாவட்ட கலெக்டர் பங்களா மற்றும் முகாம் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு 15 பேர் வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நள்ளிரவு நேரம் ஆகி விட்டதால் கலெக்டரை சந்திக்க முடியாது, எனவே மறுநாள் வந்து மனு கொடுங்கள் என்று கூறினர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், செங்கோட்டை அருகே புளியரை சோதனை சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் சில லாரிகளை மட்டும் விடுவித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அதே போல் தங்கள் தரப்பு லாரிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கலெக்டர் பங்களா பாதுகாப்பு பணி போலீஸ்காரர் சதீஷ் மோகன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் உள்பட 15 பேர், தன்னிடம் வாக்குவாதம் செய்து அவதூறாக பேசியதாக கூறிஇருந்தார். இது தொடர்பாக அவர்கள் 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்