விழுப்புரத்தில்: அரசாணை நகலை எரித்து ஆசிரியர்கள் போராட்டம் - 83 பேர் கைது

விழுப்புரத்தில் அரசாணை நகலை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-25 22:45 GMT
விழுப்புரம், 

தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி அரசாணைகள் 234, 303 ஆகியவற்றின் நகல்களை தீ வைத்து எரித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரஹீம் விளக்கவுரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர் சண்முகசாமி, பொருளாளர் தண்டபாணி, நிர்வாகிகள் செல்லையா, மூர்த்தி, பாரி, துளசிங்கம், மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி அரசாணைகளின் நகலை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்