மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஷில்பாவிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
திருவேங்கடம் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், படைப்புழுக்கள் தாக்கிய மக்காச்சோள பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “அமெரிக்காவால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களை பயிரிடுமாறு வேளாண்மைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அவர்கள் பரிந்துரையை நம்பி எங்கள் ஊரைச் சுற்றி சுமார் 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோள பயிர் கள் பயிரிட்டோம். சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்தோம். அந்த பயிர் களை படைப்புழு தாக்கி சேதப்படுத்தி உள்ளது. மருந்துகள் அடித்தும் புழுக்களை அழிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க விதைகளை வழங்கக்கூடாது“ என்று கூறப்பட்டு இருந்தது.
கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், ஊர் மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “எங்கள் கிராமத்தின் தெற்கு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கடையநல்லூர் நகரசபை சார்பில் உரக்கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே அந்த உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பொன்ராஜ் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், எங்கள் பகுதியில் வசதியானவர்களுக்கு மட்டுமே இலவச ஆடு, மாடு வழங்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளை மீறி பலருக்கு இலவச ஆடு, மாடு வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். ஏழைகளுக்கு ஆடு, மாடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தோல் பாவை கலைஞர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முகைதீன், பர்கீட் அலாவுதீன் உள்ளிட்டவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், “மானூர் முதல் தெற்குபட்டி வரை சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
தே.மு.தி.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் லெனின் கிளாஸ்டர், தவசிகுமார், சங்கர், துரைபாண்டி, சின்னத்துரை உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டம் கண்ணன்குளம், செட்டிகுளம் ஆகியவை நிரம்பி செட்டிகுளம் டவுன் ஷீப் பின்புறம் வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது. அந்த ஆற்று நீரை ராதாபுரம் தொகுதியில் உள்ள குளங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளநீர் கால்வாய் திட்டம் நிறைவேறாத இந்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீர் ராதாபுரம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பா பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்யும் இடம் இருந்தது. தற்போது அந்த இடம் பொருமாள்புரம் பாரதிநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் துணிகளை தைத்து கொடுத்து வருகிறார்கள். பொறுப்பில் இருக்கும் தனி அலுவலர் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 5 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தினார்.