மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தூத்துக்குடியில் அரசாணை நகலை எரித்து ஆசிரியர்கள் போராட்டம் 54 பேர் கைது
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தூத்துக்குடியில் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று காலையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாப்ஹையஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பறித்த அரசாணைகளின் நகல்களை எரித்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மடத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.