சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், வாழப்பாடி அருகே உள்ள அணைமேடு பகுதியை சேர்ந்த பொன்னாமலை (வயது 93) என்பவர், சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.
கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே வந்த போது திடீரென அவர், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று பொன்னாமலையை தீக் குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் பொன்னாமலை கூறும் போது, ‘எனக்கு சொந்தமாக அணைமேடு பகுதியில் உள்ள நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் உடந்தையாக இருந்து வருகிறார். மேலும் என்னுடைய நிலத்தை அளவீடு செய்யவும் மறுத்து வருகிறார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தேன்‘ என்று கூறினார். இதையடுத்து அவர், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.