சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் கிணற்றில் குதிக்க முயன்றதால் பரபரப்பு கணக்கெடுப்பு பணிக்கு வந்த அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கிணற்றில் குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கணக்கெடுப்பு பணியை தொடர முடியாமல் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான பணிகள் தொடங்கின. இந்த விரிவாக்கத்திற்காக காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆனால் விரிவாக்க பணிக்கு விவசாய நிலங்களை கொடுக்க விவசாயிகள் மறுத்து வருகிறார்கள். இதையொட்டி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் கடந்த 2 மாதங்களாக விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று காடையாம்பட்டி தாலுகா தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள விரிவாக்க பணி தனி தாசில்தார்கள் சாந்தி, பெரியசாமி மற்றும் அலுவலர்கள் அங்கு சென்றனர். இதை அறிந்ததும் தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் திரண்டனர்.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி நிலத்தை விரிவாக்க பணிக்கு கொடுக்க ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், இதனால் தான் அந்த பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொள்ள வந்ததாகவும் விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மற்ற விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். விவசாய நிலத்தை விரிவாக்க பணிக்காக எடுக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சில விவசாயிகள், அந்த நிலத்தை விரிவாக்கத்துக்கு கொடுக்க முன்வந்த விவசாயியின் கிணற்றின் அருகில் வந்தனர். பின்னர் அந்த விவசாய கிணற்றில் குதிக்க முயன்றனர். இதனால் அருகில் நின்ற மற்ற விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து கிணற்றில் குதிக்க முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். தாசில்தார் காரையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நிலைமையை அறிந்த அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்காமல் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.