10 நாட்களுக்கு பிறகு களை கட்டியது: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுற்றுலா இடங்கள் களை கட்டின.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ‘கஜா’ புயல் காரணமாக கடந்த 16-ந்தேதி பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக 25 செ.மீ மழையளவு பதிவானது. சுழன்று அடித்த காற்றால் கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை, கீழ்மலைக்கிராமங்களில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. மலைப்பாதைகளிலும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.
அதன்பிறகு சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதன்பிறகும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பின.
மழை காரணமாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் அமைந்துள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி மற்றும் தேவதை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மழைக்கு ஆங்காங்கே புதிதாக சிறு, சிறு அருவிகளும் தோன்றி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை முதலே வெயில் அடிக்க தொடங்கின. அத்துடன் வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்தது. 10 நாட்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியதால் சுற்றுலா இடங்கள் களைகட்டின. பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதின. குறிப்பாக நீர்வீழ்ச்சிகளின் முன்பு ‘செல்பி’ எடுப்பதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக அதனை நம்பியிருந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.