விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் 3 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.79 லட்சத்து 38 ஆயிரம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ரூ.79 லட்சத்து 38 ஆயிரம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு பணம்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஏமன் நாட்டுக்கு செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக பயணிகள் 3 பேர் வந்தனர். அவர்களது நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 3 பேரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த உடைமைகளை வாங்கி சோதனை போட்டனர்.
இதில், அவர்கள் வெளிநாட்டு பணம் அதிகளவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரியால் மற்றும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருந்தன.
3 பேர் கைது
இவற்றின் இந்திய மதிப்பு ரூ.79 லட்சத்து 38 ஆயிரம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 3 பேரையும் பிடித்து சகார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்களது பெயர் அகமது முகமது அலி, சலீம் செய்யது சாலே ஹசாப், நீமா சலீம் அகமது நசீர் என்பதும், 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அந்த வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.