திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பைகளுக்கு தடை
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.;
திண்டுக்கல்,
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னோட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் தற்போதே பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள், பொதுமக்களும் பாலித்தீன் பைகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டது.
இதை முறையாக கடைபிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையை பொறுத்தவரை தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் ஆவர்.
அவ்வாறு வருபவர்கள், நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாலித்தீன் பைகளில் கொண்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகள் பாலித்தீன் பைகளால் நிரம்பி விடுகிறது. மேலும் சிலர் மருத்துவமனை வளாகத்தில் வீசி விடுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மருத்துவமனைக்கு பார்வையாளர்களை சோதனை செய்யும்படி, காவலாளிகளுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனை நுழைவு வாயிலிலேயே பார்வையாளர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். அப்போது அவர்கள் பாலித்தீன் பைகளை வைத்து இருந்தால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது.