கோவையில் தொடர் கைவரிசை, வீடுகளில் புகுந்து திருடிய 2 பேர் கைது _17 பவுன் நகை; கார்கள் மீட்பு

கோவையில் வீடுகளில் புகுந்து திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 17 பவுன் நகை, 2 கார்கள் மீட்கப்பட்டன. மேலும் அவரது கூட்டாளியும் சிக்கினார்.

Update: 2018-11-25 22:00 GMT
போத்தனூர், 

வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகை, கார் திருட்டில் ஈடுபட்டு உள்ளார். கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை கோவையில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிரபல கொள்ளையனான மணிகண்டன் கடந்த 3-ந் தேதி ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதை அறிந்த போலீசார் அவரை கைது செய்ய முடிவு செய்தனர். கேரளாவில் இருந்து கோவை வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டன் காரில் தப்பி சென்ற போது பெருந்துறையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் மணிகண்டன் கோவை தனிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை கைது செய்து கோவை தெற்கு பகுதி உதவி கமிஷனர் சோமசுந்தரம், குனியமுத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவை வெள்ளலூர், குனியமுத்தூர், கோவைப்புதூர், வடவள்ளி, செட்டிப்பாளையம் உள்பட பல்வேறு வீடுகளில் புகுந்து தொடர்ந்து திருடியது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் 17 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மணிகண்டனுக்கு உதவியாக இருந்த அவரது கூட்டாளி அருண்குமார் (25) என்பவரும் கைது செய்யப்பட்டார். மணிகண்டன் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கர்நாடகம், கேரளா மாநிலங்களிலும் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு கூட்டாளியான கோபிநாத் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்