‘அம்பரீஷ் நல்ல மனிதர்’ நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
‘அம்பரீஷ் போன்று நல்ல மனிதர் கிடைக்க சாத்தியமில்லை’ என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறினார்.
பெங்களூரு,
‘அம்பரீஷ் போன்று நல்ல மனிதர் கிடைக்க சாத்தியமில்லை’ என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார் அஞ்சலி
நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் மாரடைப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, அம்பிகா உள்பட திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் அம்பரீசின் மனைவி சுமலதாவுக்கும், மகன் அபிஷேக்கிற்கும் ஆறுதல் கூறினர். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நல்ல மனிதர்
நானும், அம்பரீசும் 40 ஆண்டுகால நண்பர்கள். அவருடைய இழப்பு மனதுக்கு வருத்தத்தை அளிக்கிறது. திரையுலகுக்கு அம்பரீஷ் மாதிரியான நடிகர்கள் வரலாம். உண்மையில் அம்பரீஷ் மாதிரி நல்ல மனிதர் கிடைக்க சாத்தியமில்லை. நான் பெங்களூரு வந்தால் அம்பரீஷ் வீட்டில் சாப்பிடாமல் சென்றது இல்லை. சமீபத்தில் 4-5 முறை பெங்களூரு வந்தாலும் அவருடைய வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன்பு பெங்களூரு வந்தேன். அப்போது எனக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி அம்பரீஷ் அழைத்தார். அதற்கு நான், ‘‘எனக்கு அவசர வேலை இருப்பதால் இந்த முறை உங்கள் வீட்டுக்கு வர இயலவில்லை. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக வருகிறேன்’’ என்று கூறினேன்.
இதைக்கேட்ட அம்பரீஷ், அடுத்த முறை பெங்களூரு வந்துவிட்டு வீட்டுக்கு வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றார். ஒவ்வொருவருக்கும் நெருங்கிய நண்பர்களாக 2 பேர் இருப்பார்கள். அதேபோல் 100-க்கும் அதிகமானவர்களிடம் அம்பரீஷ் நண்பர்களாக இருப்பார். நட்பின் உருவமே அம்பரீஷ்.
அம்பரீசின் மனைவியான சுமலதா இந்த துக்கத்தை தாங்கும் சக்தியையும், அம்பரீசின் ஆன்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு உருக்கமாக கூறினார்.
எதிரிகள் இல்லை
இதேபோல் நடிகர் சரத்குமார் கூறுகையில், ‘அம்பரீஷ் எனக்கு நல்ல நண்பர். பெங்களூரு வந்தால் அவரை பார்ப்பேன். அவர் மரணம் அடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எதிரிகளே இல்லை. அவர் நிறைய நண்பர்களை வைத்துள்ளார்’ என்றார்.