நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் ‘திரையுலகிலும், அரசியலிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது’

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகிலும், அரசியலிலும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்று குமாரசாமி கூறினார்.

Update: 2018-11-25 23:00 GMT
பெங்களூரு, 

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகிலும், அரசியலிலும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்று குமாரசாமி கூறினார்.

முதல்-மந்திரி குமாரசாமி

நடிகர் அம்பரீஷ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அம்பரீசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பரீசின் ஆன்மா அமைதி பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

மிகப்பெரிய வெற்றிடம்

எனக்கும், அம்பரீசுக்கும் இடையே அரசியல், சினிமாவை தாண்டி நட்பு இருந்தது. அம்பரீசின் மரணம் திரையுலகிலும், அரசியலிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவரது மறைவை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும் என்று வேண்டுகிறேன்.

மண்டியாவில் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மண்டியா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, ஹெலிகாப்டர் வசதி செய்து தருமாறு மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுடன் பேசினேன். அவர் ஹெலிகாப்டரை வழங்குவதாக உறுதி அளித்தார்.

ஊர்வலமாக...

அதனால் இன்று(அதாவது நேற்று) மாலை 4 மணிக்கு அம்பரீசின் உடல் மண்டியாவுக்கு எடுத்து செல்லப்படும். நாளை(அதாவது இன்று) காலை 6 மணி வரை அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை(அதாவது இன்று) காலை 6 மணிக்கு உடல் மீண்டும் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்படும். காலை 10 மணியளவில் அம்பரீசின் உடல் ஊர்வலமாக கன்டீரவா ஸ்டுடியோவுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

பரமேஸ்வர்

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கன்னட திரைத்துறை மற்றும் அரசியலில் முத்திரை பதித்த அம்பரீஷ், இன்று நம்முடன் இல்லை என்று நினைக்கிறபோது, வேதனையாக உள்ளது. அவரது மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. முன்பு ஒருமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார்.

சேதம் விளைவிக்க வேண்டாம்

மத்திய மந்திரியாகவும், மாநில மந்திரியாகவும் பணியாற்றியவர். அவரை அரசியலில் இன்னும் உயர்ந்த பதவியில் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. நான் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றினேன்.

அவரை அமைதியான முறையில் அனுப்பி வைப்போம். யாரும் ெபாது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

எடியூரப்பா

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

கன்னட திரைத்துறையில் ‘கலியுக கர்ணன்’ என்று பெயர் பெற்ற அம்பரீசின் மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. நானும், அம்பரீசும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அரசியலில் வேறு கட்சியில் இருந்தாலும், அவர் என்னுடன் அதிகமாக நட்புறவு கொண்டிருந்தார். இத்தகைய ஒரு திறமையான நடிகர் மற்றும் அரசியல் தலைவரை இழந்து கர்நாடகம் ஏழையாகிவிட்டது. அம்பரீசின் ஆன்மா அமைதி பெறவும், இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்