உலகமரபு வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
உலகமரபு வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மீன்சுருட்டி,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் உலகமரபு வார நிறைவு விழா கங்கைகொண்டசோழபுரம் அகழ்வைப்பகத்தில் நடைபெற்றது. இதில் கொல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவியப் போட்டியும், கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வினாடி- வினா மற்றும் பேச்சுப் போட்டியும், உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன. மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொல்பொருட்கள் என்றால் என்ன அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி விளக்கப் படங்களுடன் வகுப்பு எடுக்கப்பட்டது. மேலும் மேலப்பழூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரட்டைக்கோவிலில் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல போட்டிகள் வைக்கப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் நிறைவு விழாவில் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு, பாராட்டு விழாவிற்கு அகழ்வைப்பக ஆலோசனைக்குழு உறுப்பினர் பாலுசாமி தலைமை தாங்கினார். கங்கைகொண்டசோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். ஒரு வாரமாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பினை காப்பாட்சியர் பிரபாகரன் வாசித்தார். உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி மற்றும் கொல்லாபுரம் ஓவிய ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
முடிவில் 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி வழங்கினார். இந்த விழாவில் அகழ்வைப்பக காவலர்கள் பாலாஜி, மருதகாசி மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அகழ்வைப்பக காவலர் அசோகன் வரவேற்றார். முடிவில் கங்கைகொண்டசோழபுரம் அகழ்வைப்பக காப்பாட்சியர் பிரபாகரன் நன்றி கூறினார்.